Friday, July 7, 2017

கடவுளைக் கண்ணால் காண முடியுமா?

திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன விளக்கம்:
"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''
"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும்.
காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.  உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?'' "ஆம். நன்றாகத் தெரிகின்றது.''
 "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''
"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?'' "ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.
"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான். "ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே.
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?'' "முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....'' "எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''
"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''
"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''
"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா? மாணவன் துணுக்குற்றான்.
நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.
 "குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.'' "ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''
"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''
 "ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்.'' "அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம். தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.

கிருஷ்ணபட்சம் - சுக்லபட்சம்

"கிருஷ்ண' என்றால் கருப்பு. இது இருளைக் குறிக்கும். "சுக்ல' என்றால் வெண்மை. ஒளியைக் குறிக்கும். "பட்சம்' என்றால் பதினைந்து நாட்கள். அமாவாசையின் மறுநாள் துவங்கி பிறைநிலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிவீசும். பவுர்ணமியன்று முழுநிலவாக பிரகாசிக்கும். இரவில் வெண்மையாக ஒளிவீசும் வளர்பிறை நாட்களுக்கு "சுக்லபட்சம்' என்று பெயர். பவுர்ணமியின் மறுநாள் தேய்பிறை தொடங்கி இரவில் இருள் சூழ்ந்து வருவதால் அமாவாசை வரையிலான பதினைந்து நாட்களுக்கு "கிருஷ்ணபட்சம்' என்று பெயர்.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும்.  இரு பதினைந்து, அதாவது ஒரு மாத காலத்தில், சுப காரியங்களில் ஈடுபட  இந்த திதிகள் உகந்தவையாகக் கருதப் படுகிறது

உத்திராயணம் - தட்சிணாயணம்

சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய காலம் உத்திராயண புண்ணிய காலம் எனப்படும். இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம் ) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயணம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை.

தை மாதம் முதல் 6 மாதம் உத்திராயணம் - ஆனி மாதம் முடிய இருக்கும். உத்திராயண புண்ணிய காலங்களில் பிறந்தவர் நல்லதை நினைப்பான், நல்லதை செய்வான், நல்லதை உண்பான் என்றும் சொல்வார்கள்! சுபகாரியங்கள்  உத்திராயண காலத்தில், அதாவது தை முதல் ஆனி வரையிலான மாதங்களில் செய்வது உத்தமமானது என்று கருதப்படுகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயணம் எனப் படுகிறது. 

கடுவெளி சித்தரின் - சுடுகாட்டு ஞானம்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி .

இப்பூலோகம் எனும் நந்தவனத்தில் மனிதப்பிறவியை அடைய தாயின் கருவறையில் பத்து மாத காலம் ( நாலாறு = 4 + 6 ) கடவுள் கருணையினால் கருவாக உதித்து உடம்பு வளர்ந்து வெளிவருகிறான். இவ்வாறு பெற்று வந்து உடம்பின் அருமையை உணராமல் இவ்வுடம்பிலேயே உள்ள கடவுளை அறியாமல் காம, கோப வழிகளில் சென்று கூத்தாடி கூத்தாடி இவ்வுடம்பை இழந்துவிடுகிறான். இப்பிறவி அருமையை அறியாமலேயே உயிர்போய் இறந்துவிடுகிறான் என்பதையே கடுவெளி சித்தர் பாடுகிறார்.

இறந்த உடம்பை இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று அங்கு சில சடங்குகளை செய்த பின்னே சிதையில் வைத்து தீயிடுவார்கள். அதில் இறந்தவரின் வாரிசு தோளில் ஒரு மண்குடத்தில் நீரை நிரப்பி வைத்து சடலத்தை மூன்று முறை சுற்றிவர சொல்வார்கள். ஒவ்வொரு சுற்று வரும் போதும் அம்மண்பானையில் அரிவாளால் ஓட்டை போட்டு பானையில் உள்ள நீர் வெளியேறும் போது புறங்கையால் தட்டி விடுவார்கள். இவ்வாறு மூன்று ஓட்டைகளைப் போட்டு சுற்றி முடித்த பின் அப்பானையை கீழே போட்டு உடைப்பார்கள்.
இவ்வுடம்பு பஞ்சபூதங்களின் கூட்டுறவு.
நீர் = ரத்த ஓட்டம்
நெருப்பு = வெப்ப ஓட்டம்
காற்று= காற்றோட்டம்
நிலம் = உடம்பு
ஆகாசம் = உயிர்
ரத்த ஓட்டம், காற்றோட்டம்,வெப்பஓட்டம் இந்த மூன்று ஓட்டத்தில் எது நின்றாலும் உடம்பை விட்டு உயிர் பிரிந்தது விடும்.

இந்த உடம்பில் உயிர் இயங்கியதை அறிந்து அதைப் பற்றியிருந்தால் இறவா நிலை பெற்றிருக்கலாம் என்பதைச் சொல்லவே இச்சடங்கு சுடுகாட்டில் நடத்திக் காட்டப்படுகின்றது.  யோக சாதனையினால் கடவுளை பற்றி நின்று தவம் இயற்றினால் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இறவாநிலை அடையலாம் என்பதே இச்சடங்கு சொல்லும் சுடுகாட்டு ஞானம்.

இறந்த பிறகு "இறைநிலை எய்தினார்" , "சிவலோக பதவி அடைந்தார்" , "கடவுளை அடைந்தார்" என்று சொல்வதால் மட்டும் ஒருவர் இறைவனை அடைய முடியாது. இருக்கும் போது பிறருக்கு துன்பம் தராமல் நன்மை செய்து , யோக சாதனை மூலம் இறைவனை அடைய முயற்சி செய்தால் மட்டுமே உண்மையாக இறைநிலை அடைய முடியும்.


ஆலயம் ஏன்?

சுவாமி விவேகானந்தர்  ஒரு சமயம் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டு, "ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ? ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்றான்.
.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று வினவினார் சுவாமி விவேகானந்தர்.

அவன் ஓடிப் போய் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தான். சுவாமி அவனைப் பார்த்து , “ நான் தண்ணீர்தானே கேட்டேன்.எதற்கு இந்த செம்பு? செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா? என்று கேட்டார்.


குழம்பிப் போன அவன், “அது எப்படி முடியும்? என்றான். விவேகானந்தர் அவனிடம், “ஆம் சகோதரனே, தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம். ஆனாலும் செம்பே தண்ணீர் ஆகாது; ஆலயமே ஆண்டவனாகாது.” என்றார்.

கும்பாபிஷேகம் என்பது என்ன?

இறைவன் ஜோதி வடிவானவன். "ஜோதியே, சுடரே, சூழொளி விளக்கே" என்பார் மணிவாசகர். அப்படி, ஜோதி வடிவான இறைவனைக் கல்லிலே அமைப்பர். பிரதிஷ்டை செய்யுமுன் மூர்த்தியை தானியத்திலும் (தான்யவாசம்), நீரிலும் (ஜலவாசம்) வாசம் செய்ய வைத்து, மந்திர யந்திரத்தை எழுதி, ஆகம முறைப் படி, மூர்த்தியின் அடியிலே வைப்பர்.
பின்னர், யாகங்களால் ஜோதியை வளர்த்து, அந்த இறை ஜோதியை கும்பத்திற்குக் கொண்டு போய், கும்பத்தில் இருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவது தான் கும்பாபிஷேகம்.

கும்பாபிஷேகத்துக்கு முன் அது கல். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கடவுள். எப்படி காகிதம் கரன்சி நோட்டாக மாறுகிறதோ அது போல என்று உணர்க. காகிதம் பற்பொடி மடிக்க உதவும். ஆனால், கரன்சி நோட்டினால் இரயில்வேயில் டிக்கெட் வாங்கலாம். அது போல, இறைவன் கல் வடிவில் கருவறையில் இருந்து நமக்குக் காட்சி அளித்து ஆட்கொள்கிறான். - தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் -

Thursday, July 6, 2017

நைவேத்தியம்

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். “குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா?” என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல், அவனை  ஊடுருவி  பார்த்துவிட்டு  ‘’நமது  வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது.  வகுப்பறையை  தயார்  செய். சிறிது  நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார். அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.  அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
”பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.

“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்.  குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்.”
இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார்.  ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்

மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பது ஏன்?

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ  அப்போது மரணமடைவார்என்பதே அது.

பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.அர்ச்சுணனை நோக்கி, ‘சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாகஎன்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.


மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

மொட்டை போடுவதன் காரணம்

உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள். இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும். பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.

குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது, மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள். ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.
ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.

இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும், 'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள். 'முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள். யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும். மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும். இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.

மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான். அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.

குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார். அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.

ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டுநாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே. ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும். 

ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது. வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம். ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.

யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ, மதமோகாரணமில்லை என்பதை உணருங்கள். தனிமனிதனின் தவறுக்காக, ஒரு மதத்தையே இழிவாக்குவது, இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!

பிரம்ம முகூர்த்தம்

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக் குறைய மறு பிறவி தானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்