Friday, July 7, 2017

கடுவெளி சித்தரின் - சுடுகாட்டு ஞானம்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி .

இப்பூலோகம் எனும் நந்தவனத்தில் மனிதப்பிறவியை அடைய தாயின் கருவறையில் பத்து மாத காலம் ( நாலாறு = 4 + 6 ) கடவுள் கருணையினால் கருவாக உதித்து உடம்பு வளர்ந்து வெளிவருகிறான். இவ்வாறு பெற்று வந்து உடம்பின் அருமையை உணராமல் இவ்வுடம்பிலேயே உள்ள கடவுளை அறியாமல் காம, கோப வழிகளில் சென்று கூத்தாடி கூத்தாடி இவ்வுடம்பை இழந்துவிடுகிறான். இப்பிறவி அருமையை அறியாமலேயே உயிர்போய் இறந்துவிடுகிறான் என்பதையே கடுவெளி சித்தர் பாடுகிறார்.

இறந்த உடம்பை இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று அங்கு சில சடங்குகளை செய்த பின்னே சிதையில் வைத்து தீயிடுவார்கள். அதில் இறந்தவரின் வாரிசு தோளில் ஒரு மண்குடத்தில் நீரை நிரப்பி வைத்து சடலத்தை மூன்று முறை சுற்றிவர சொல்வார்கள். ஒவ்வொரு சுற்று வரும் போதும் அம்மண்பானையில் அரிவாளால் ஓட்டை போட்டு பானையில் உள்ள நீர் வெளியேறும் போது புறங்கையால் தட்டி விடுவார்கள். இவ்வாறு மூன்று ஓட்டைகளைப் போட்டு சுற்றி முடித்த பின் அப்பானையை கீழே போட்டு உடைப்பார்கள்.
இவ்வுடம்பு பஞ்சபூதங்களின் கூட்டுறவு.
நீர் = ரத்த ஓட்டம்
நெருப்பு = வெப்ப ஓட்டம்
காற்று= காற்றோட்டம்
நிலம் = உடம்பு
ஆகாசம் = உயிர்
ரத்த ஓட்டம், காற்றோட்டம்,வெப்பஓட்டம் இந்த மூன்று ஓட்டத்தில் எது நின்றாலும் உடம்பை விட்டு உயிர் பிரிந்தது விடும்.

இந்த உடம்பில் உயிர் இயங்கியதை அறிந்து அதைப் பற்றியிருந்தால் இறவா நிலை பெற்றிருக்கலாம் என்பதைச் சொல்லவே இச்சடங்கு சுடுகாட்டில் நடத்திக் காட்டப்படுகின்றது.  யோக சாதனையினால் கடவுளை பற்றி நின்று தவம் இயற்றினால் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இறவாநிலை அடையலாம் என்பதே இச்சடங்கு சொல்லும் சுடுகாட்டு ஞானம்.

இறந்த பிறகு "இறைநிலை எய்தினார்" , "சிவலோக பதவி அடைந்தார்" , "கடவுளை அடைந்தார்" என்று சொல்வதால் மட்டும் ஒருவர் இறைவனை அடைய முடியாது. இருக்கும் போது பிறருக்கு துன்பம் தராமல் நன்மை செய்து , யோக சாதனை மூலம் இறைவனை அடைய முயற்சி செய்தால் மட்டுமே உண்மையாக இறைநிலை அடைய முடியும்.


No comments:

Post a Comment