Friday, June 8, 2018

சைவ நாற்பாதங்கள்

சைவ நாற்பாதங்கள் என்பது மனிதர்களாகப் பிறந்த நாம் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுதினமும் பின்பற்ற வேண்டிய படிமுறைகளாகும். அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும். இவை நான்கும் வெவ்வேறு வழிகளல்ல; நம்மைத் தானாக நகர்த்தும், நகரும் படிகளைப் (escalator) போன்றது. படி. ஒன்றில் நிலைத்து நின்றால், அது தானாக அடுத்த நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும். நாம் அடைய நினைக்கும் இடத்திற்கு (முக்தி நிலை) நம்மை அழைத்துச் செல்லும்.

சரியை: அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இந்த மார்க்கத்தை தாச மார்க்கம் என்பார்கள். இது ஒரு அடிமையைப் போல அல்லது வேலைக்காரனைப் போலத் தொண்டுகள் செய்யும் முறை.

கிரியை: சரியை முறையில் இறைவனை வழிபட்டு வர, மனதில் இறைவனின் மேலுள்ள பக்தி அதிகமாகும் பொழுது, மந்திரங்களையும், பூசைக்கு உரிய வழிமுறைகளையும் அறிந்து கொண்டு, தமக்காகவும், மற்றவர்களுக்காகவும் வீட்டில் செய்யும் பூசைகளும், கோவில்களில் செய்யப்படும் ஆத்மார்த்தமான பூசைகளும் கிரியையில் அடங்கும். இந்த நிலையில் பக்குவப்படும் போது, குருவின் துணையும், தீட்சை பெறும் பாக்கியமும் நிகழும். இந்த மார்க்கத்தை சற்புத்திர மார்க்கம் என்பர். ஒரு மகனானவன் தன் தந்தைக்கு மன நிறைவோடு செய்யும் தொண்டு போன்றதே இது.

யோகம்: ஒரு குருவின் துணையோடு யோக உறுப்புகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை முறைப்படி பயின்று, அதனை அனுசரித்து, அதன்படி யோக நெறியில் நிற்பது யோகம் எனப்படும். இவ்வழியில் நிற்க, திடமான சித்தம் அவசியமாகும். இதற்கான மார்க்கத்தை சக மார்க்கம் என்பர். இறைவனை நண்பனாகத் தோழமை உணர்வுடன் தரிசிக்க உதவும் மார்க்கம் இது. இந்நெறியில் நிற்பவர்கள் வடிவத்தில் ஒளி பெற்று, மற்றவர்களால் சிவ வடிவினுக்கு ஒப்பாக மதிக்கப் படுவார்கள்.

ஞானம் : இறைவனை உருவம், அருவுருவம் (லிங்கம்), அருவம் (உருவமற்ற தன்மை) ஆகிய மூன்று தன்மைகளையும் கடந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சொரூபமாக தனது மனதால், அறிவால், வழிபடுவதே ஞானமாகும். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று நிலைகளிலும் தன்னை நினைந்து பக்குவப்பட்ட ஒருவனது ஆன்மாவை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசித்தருளி ஞானத்தை அளித்து முத்தியை அடையச் செய்வார். இந்த நிலையை அடைவதற்கு உண்டான மார்க்கத்தை சன்மார்க்கம் என்றழைப்பார்கள். சன்மார்க்கம் என்பது இறைவனை நாயகன், நாயகியாக, ஒளி வடிவில் தனதறிவால், ஆன்மாவால் தரிசிப்பது. இம்மார்க்கம் ஒரு ஆன்மாவைச் சிவமாகும் தன்னைக்கு எடுத்துச் செல்லும்.

முத்தியடைவதற்கு மெய்யுணர்வாகிய ஞானத்தைப் பெறுதல் வேண்டும். அந்த ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனமாகச் சரியை, கிரியை, யோகம் என்பவற்றைச் சைவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. நம் புற வாழ்வையும் அக வாழ்வையும் ஒழுக்க நெறிப்படுத்தி, முடிவில் வீடுபேற்றைத் தரும் சாதனங்களே இவை.

முத்தியில் நாட்டமுடையவர்கள் இவற்றுள் எதனைப் பின்பற்றி ஒழுகினாலும் அது முடிவிலே ஞானத்துக்கு நம்மை அழைத்துச் சென்று இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய முக்தியை நல்கி விடும். ஞானத்தை நாம் ஒரு பழத்திற்கு ஒப்பிட்டால், சரியையை அரும்பாகவும், கிரியையை மலராகவும்,  யோகத்தைக் காயாகவும் எடுத்துக் கொள்ளலாம்.. அரும்பாகத் தோன்றியது, ஒழுங்காகப் பேணி வளர்க்கப் பட்டால், இடையூறு ஏதும் நிகழாதபோது, அது படிப்படியாக வளர்ச்சியடைந்து கனியாக மாறுவது போல, இயல்பாகவே சரியையில் ஆரம்பித்த ஆன்மா பக்குவப்பட்டு, ஞானத்தை அடையும்.  ஞானத்தை அடைந்த ஆன்மா முடிவில் மேலான வீடுபேற்றை அடைவது உறுதி.

முருகனை வழிபடுவதன் சிறப்பு

ஈஸ்வரனின் அம்சமான முருகன், இப்பிறவியிலும் இன்பத்தை அளித்து, மறுபிறவியிலும் இன்பத்தை அளிக்க வல்லவன். முருகனை வணங்குபவர்கள் வாழ்வு எப்போதும் மலர்ந்திருக்கும். இதனை உணர்த்தவே முருகனின் வலப்புறத்தில் வள்ளியும், இடப்புறத்தில் தெய்வயானையும் இருப்பதாக ஐதீகம். வேடர்களிடத்தே மானிடப் பிறவியாகப் பிறந்து வளர்ந்த வள்ளி மண்ணுலக இன்பத்தினை நல்குவாள். இந்திரனின் மகளாகப் பிறந்து, அவனது வாகனமாகிய ஐராவதத்திடம் வளர்ந்த தெய்வயானை, மேலுலக இன்பத்தை அளிப்பாள். முருகனின் கையில் உள்ள ஞானவேல் அவனது பக்தர்களுக்கு ஞானத்தை நல்கும். இம்மூன்றையும் பெற்ற பக்தன், இகபர சௌபாக்கியம் பெற்று, முக்தி அடைவது உறுதி.

முருகனின் வலது கண் சூரியனையும், இடது கண் சந்திரனையும், மூன்றாவது கண் அக்னியையும் குறிக்கும். வலபுறத்தில் நின்றிருக்கும் வள்ளி தனது கரத்தில் தாமரை மலரை ஏந்தி இருப்பதைப் பார்க்க முடியும். தாமரை சூரியனைப் பார்த்தவுடன் மலர்ந்து, பகலெல்லாம் பூத்திருக்கும். இடபுறத்தில் உள்ள தெய்வயானை தனது கரத்தில், நீலோத்பல மலரை ஏந்தியிருப்பாள். நீலோத்பல மலர் சந்திரனைக் கண்டவுடன் மலர்ந்து இரவில் பூத்திருக்கும். ஆகவே முருகனை வழிபடும் பக்தர்கள் வாழ்வு, வள்ளி, தெய்வயானை இருவரின் அருளால் எந்நேரமும் மலர்ந்து பூத்திருக்கும் என்பது உறுதி.



விகட சக்கர விநாயகர்

தக்கனின் யாகத்தை அழிக்க, தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஈசன் வீரபத்திரரைத் தோற்றுவித்து அனுப்பினார். அவர் தக்கனின் யாகத்தை அழித்து, தேவர்களை வதம் செய்து, திருமாலுடன் போர் புரியும் போது, திருமால், வீரபத்திரரின் மேல் தனது சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் வீரபத்திரரை நோக்கி விரைந்து வர, அதனை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் இருந்த கபாலம் ஒன்று விழுங்கியது.

தனது சக்கராயுதத்தைத் திரும்பப் பெற, திருமால் தனது சேனாதிபதியான விஷ்வக்சேனரை அனுப்பினார். சிவாலயங்களில் முதலில் விநாயகரை வழிபடுவது போல் பெருமாள் கோவில்களில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். 'விஷ்வக்' என்றால், எல்லா இடமும் என்று பொருள். எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செல்லக்கூடிய படைகளை உடையவர் என்றும் பொருள் உண்டு.

விஷ்வக்சேனர் காஞ்சியை அடைந்து, சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, ஈசனை எண்ணி தவமிருந்தார். அவரின் முன் வீரபத்திரர் காட்சியளித்து, “வேண்டிய வரம் கேள்எனக் கூற, விஷ்வக்சேனரும் திருமாலின் சக்கரத்தைத் திரும்பத் தருமாறு வேண்டினார். வீரபத்திரர், அதனை விழுங்கிய கபாலத்திடமே எப்படியாவது கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூற, விஷ்வக்சேனர், தனது கை கால்களைக் கோணலாக்கிக் கொண்டு தள்ளாடியபடி ஒரு விகட நடனமாடினார். அதைக் கண்டு வீரபத்திரர் உள்ளிட்ட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அவர் அணிந்திருந்த மாலையிலிருந்த கபாலமும் சிரிக்க, அதன் வாயிலிருந்து திருமாலின் சக்கராயுதம் கீழே விழுந்து உருண்டோடியது. அதனை விஷ்வக்சேனர் எடுக்கும் முன்னர், விநாயகர் அதனை எடுத்துக் கொண்டார்.

விஷ்வக்சேனர் விநாயகரை வணங்கி, தன்னிடம் திருமாலின் சக்கராயுதத்தைத் திரும்பத் தருமாறு வேண்ட, விநாயகர் தனக்காக மீண்டும் ஒரு முறை தன் முன் விகட கூத்தாடினால் சக்கரத்தைத் திரும்பத் தருவதாகக் கூறினார். அவர் வேண்டிக் கொண்டவாறே விஷ்வக்சேனரும் மறுபடியும் விநாயகர் முன் விகட கூத்தாடி, விநாயகரின் அருள் பெற்று, அவரிடமிருந்து சக்கரத்தைப் பெற்று, அதனைத் திருமாலிடம் சேர்ப்பித்தார்.

இவ்வாறு விகடக் கூத்தை இரசித்த விநாயகரே இன்றும் விகட சக்கர விநாயகராக காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக அமர்ந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.