Friday, June 8, 2018

சைவ நாற்பாதங்கள்

சைவ நாற்பாதங்கள் என்பது மனிதர்களாகப் பிறந்த நாம் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுதினமும் பின்பற்ற வேண்டிய படிமுறைகளாகும். அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும். இவை நான்கும் வெவ்வேறு வழிகளல்ல; நம்மைத் தானாக நகர்த்தும், நகரும் படிகளைப் (escalator) போன்றது. படி. ஒன்றில் நிலைத்து நின்றால், அது தானாக அடுத்த நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும். நாம் அடைய நினைக்கும் இடத்திற்கு (முக்தி நிலை) நம்மை அழைத்துச் செல்லும்.

சரியை: அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இந்த மார்க்கத்தை தாச மார்க்கம் என்பார்கள். இது ஒரு அடிமையைப் போல அல்லது வேலைக்காரனைப் போலத் தொண்டுகள் செய்யும் முறை.

கிரியை: சரியை முறையில் இறைவனை வழிபட்டு வர, மனதில் இறைவனின் மேலுள்ள பக்தி அதிகமாகும் பொழுது, மந்திரங்களையும், பூசைக்கு உரிய வழிமுறைகளையும் அறிந்து கொண்டு, தமக்காகவும், மற்றவர்களுக்காகவும் வீட்டில் செய்யும் பூசைகளும், கோவில்களில் செய்யப்படும் ஆத்மார்த்தமான பூசைகளும் கிரியையில் அடங்கும். இந்த நிலையில் பக்குவப்படும் போது, குருவின் துணையும், தீட்சை பெறும் பாக்கியமும் நிகழும். இந்த மார்க்கத்தை சற்புத்திர மார்க்கம் என்பர். ஒரு மகனானவன் தன் தந்தைக்கு மன நிறைவோடு செய்யும் தொண்டு போன்றதே இது.

யோகம்: ஒரு குருவின் துணையோடு யோக உறுப்புகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை முறைப்படி பயின்று, அதனை அனுசரித்து, அதன்படி யோக நெறியில் நிற்பது யோகம் எனப்படும். இவ்வழியில் நிற்க, திடமான சித்தம் அவசியமாகும். இதற்கான மார்க்கத்தை சக மார்க்கம் என்பர். இறைவனை நண்பனாகத் தோழமை உணர்வுடன் தரிசிக்க உதவும் மார்க்கம் இது. இந்நெறியில் நிற்பவர்கள் வடிவத்தில் ஒளி பெற்று, மற்றவர்களால் சிவ வடிவினுக்கு ஒப்பாக மதிக்கப் படுவார்கள்.

ஞானம் : இறைவனை உருவம், அருவுருவம் (லிங்கம்), அருவம் (உருவமற்ற தன்மை) ஆகிய மூன்று தன்மைகளையும் கடந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சொரூபமாக தனது மனதால், அறிவால், வழிபடுவதே ஞானமாகும். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று நிலைகளிலும் தன்னை நினைந்து பக்குவப்பட்ட ஒருவனது ஆன்மாவை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசித்தருளி ஞானத்தை அளித்து முத்தியை அடையச் செய்வார். இந்த நிலையை அடைவதற்கு உண்டான மார்க்கத்தை சன்மார்க்கம் என்றழைப்பார்கள். சன்மார்க்கம் என்பது இறைவனை நாயகன், நாயகியாக, ஒளி வடிவில் தனதறிவால், ஆன்மாவால் தரிசிப்பது. இம்மார்க்கம் ஒரு ஆன்மாவைச் சிவமாகும் தன்னைக்கு எடுத்துச் செல்லும்.

முத்தியடைவதற்கு மெய்யுணர்வாகிய ஞானத்தைப் பெறுதல் வேண்டும். அந்த ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனமாகச் சரியை, கிரியை, யோகம் என்பவற்றைச் சைவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. நம் புற வாழ்வையும் அக வாழ்வையும் ஒழுக்க நெறிப்படுத்தி, முடிவில் வீடுபேற்றைத் தரும் சாதனங்களே இவை.

முத்தியில் நாட்டமுடையவர்கள் இவற்றுள் எதனைப் பின்பற்றி ஒழுகினாலும் அது முடிவிலே ஞானத்துக்கு நம்மை அழைத்துச் சென்று இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய முக்தியை நல்கி விடும். ஞானத்தை நாம் ஒரு பழத்திற்கு ஒப்பிட்டால், சரியையை அரும்பாகவும், கிரியையை மலராகவும்,  யோகத்தைக் காயாகவும் எடுத்துக் கொள்ளலாம்.. அரும்பாகத் தோன்றியது, ஒழுங்காகப் பேணி வளர்க்கப் பட்டால், இடையூறு ஏதும் நிகழாதபோது, அது படிப்படியாக வளர்ச்சியடைந்து கனியாக மாறுவது போல, இயல்பாகவே சரியையில் ஆரம்பித்த ஆன்மா பக்குவப்பட்டு, ஞானத்தை அடையும்.  ஞானத்தை அடைந்த ஆன்மா முடிவில் மேலான வீடுபேற்றை அடைவது உறுதி.

No comments:

Post a Comment