Friday, June 8, 2018

உள்ளம் பெரும் கோயில்

ஒவ்வொரு மனிதனையும் இறைவனாகக் கண்டது, நமது சமயத்தின் சிறப்பாகும். மனிதனுக்குத் தரப்பட்ட அறிவுக் கருவிகள் என்று சொல்லப்படும் ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் நம்மால் நல்வழிப் படுத்தப்படாதபோது, அவை நம்மை, அதன் வழி இழுத்துச் சென்று, உலக இன்பங்களில் நம்மை மூழ்கடித்து, அதனால் வரும் தீவினைகளால் நம்மைத் திரும்பத் திரும்ப, பிறவித் துன்பத்தில் வீழ்த்தும். நம் அறிவினால் ஐம்புலன்களையும் அடக்கி நல்வழியில் செலுத்தினால், அதுவே நமக்கு, நமக்குள் இருக்கும் இறைவனை தரிசிக்க வகை செய்யும்.

உள்ளம் பெரும் கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே.

என்கிறார் திருமூலர். நமது மனமே இறைவன் குடி கொண்டிருக்கும் கருவறை. நமது சதையால் ஆன உடம்பே, கருவறையைத் தன்னுள் கொண்டுள்ள ஆலயம். நமது எண்ணங்களும், வார்த்தைகளும்தான் நம்மை நெறிபடுத்தி, அருள் வள்ளலாகிய இறைவன் இருக்கும் கருவறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கோபுர வாசல். இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டால், நமது ஆன்மாதான் ‘சிவம்’ (இறைவன்) என்பது விளங்கும். சாதாரண மனிதனை கள்ள வழிகளில் செலுத்தும், இழுத்துச் செல்லும் புலன்கள் ஐந்தும், அறநெறியில் நல்வழிப்படுத்தப்பட்ட மனதில், ஒளி விளக்காகி, கருவறையில் இருட்டினில், நமக்கும் தெரியாமல் நம்முள் இருந்த இறைவனை பிரகாசமாக நமக்கு காட்சி கொடுக்க வைக்கும்.

நமது உடம்புதான் ஆலயம் என்பதால், ஆன்மீகத்திற்கு உடல் ஆரோக்கியம் இன்றியமையாதது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.  பலவீனமான உடலினால், ஆத்ம முன்னேற்றம் அடைய முடியாது. உடம்பை ஆரோக்கியமாகவும், நமது மனமான இறைவனின் கருவறையைத் தூய்மையாகவும், நமது வாயிலிருந்து வெளிப்படுகின்ற வார்த்தைகள் நல்லனவாகவும், இறையருள் நிறைந்ததாகவும் இருந்தால். நம்முள் இருக்கும் இறைவனை மட்டுமன்றி, அனைவரிடத்திலும் பேதங்களின்றி இறைவனைக் காண முடியும்.

No comments:

Post a Comment